×

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் ரூ.8,609 கோடிக்கான துணை மானிய கோரிக்கை தாக்கல்: அஜித் பவார் தாக்கல் செய்தார்

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று ரூ.8,609.17 கோடிக்கான துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் அஜித் பவார் இந்த துணை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். மகாராஷ்டிரா சட்டபேரவையின் 5 நாள் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நிதியமைச்சர் அஜித் பவார் ரூ.8,609.17 கோடிக்கான துணை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார்.

இதில் ரூ.2,210 கோடி, வறட்சி, ஆலங்கட்டி மழை மற்றும், பருவம் தவறிய மழையால் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி செய்வதற்காக வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். துணை மானிய கோரிக்கை பின்னர் சட்டமேலவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது ரூ.55,520.77 கோடிக்கான துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் இறந்த உறுப்பினர்களான மனோகர் ஜோஷி மற்றும் ராஜேந்திர பாட்னி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மனோகர் ஜோஷி மறைந்த பால்தாக்கரே தலைமையிலான பிளவுபடாத சிவசேனா கட்சியின் முதல் அமைச்சராக இருந்தவர். இவர் 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்தவர். பின்னர் 2002 முதல் 2004ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மக்களவை சபாநாயகராகவும் இருந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் தனது 86 வயதில் காலமானார். பாரதிய ஜனா கட்சி எம்.எல்.ஏ.ராஜேந்திர பாட்னியும் கடந்த வாரம் காலமானார். அவருக்கும் சபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரும், சபை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நேற்று பேரவை கூடுவதற்கு முன்பு மகாராஷ்டிரா விகாஸ் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையின் படிக்கட்டுகளில் நின்றபடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். மராத்தாக்களையும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களையும் மாநில அரசு ஏமாற்றவதாக அவர்கள் கோஷம் போட்டனர். சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் விஜய் வட்டேத்திவார், சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவர் பாலாசாகேப் தோரட் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டப்பேரவைக்கு இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் ரூ.8,609 கோடிக்கான துணை மானிய கோரிக்கை தாக்கல்: அஜித் பவார் தாக்கல் செய்தார் appeared first on Dinakaran.

Tags : Ajit Pawar ,MUMBAI ,Maharashtra ,Finance Minister ,Maharashtra Assembly ,Dinakaran ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...